அன்புள்ள காதலியே, என் இதயம் எழுதுவது.. Tuesday, Dec 23 2008 

என்
பறவை நினைவுகளில் உன்
பங்களிப்புதனைப் படம் பிடித்துப் பார்க்கையில்
இதயத்தின் ஈரமான ஓர் ஓரத்தில்
வலிக்கிறது…. இன்னும்.

அதற்கு நீ காதல் என்று பெயரிட்டதாய் நினைவு.

காதல் என நாம் கருதிய நினைவுகளில்
மெல்ல நான் மூழ்குகையில்
என் சிந்தனைகளே என்னைச்
சிரத்தையோடு சிதைக்கின்றன.

இப்போது என் இதயம் கேட்பது சொல்லட்டுமா?

ஒரு தாய்ப்பறவை தன்
குஞ்சுகளுக்களிக்கும் கதகதப்பு.

மழலை பசியுணர்ந்து
மார்பு கொடுக்கும் தாய்மை.

குலுங்கி நான் அழும்போது
குனிந்து என் முதுகு தடவி
ஆறுதல் சொல்லும் தோழமை.

தோல்வி கண்டு நான் துவளுகையில்
இறைவன் துணை சொல்லி
இதயம் தேற்றும் இதம்.

ஒவ்வொரு ஸ்பரிசத்திலும்
உனக்கு நான் இருக்கிறேன் என உணர்த்தும் உறுதி.

கைவிரல் பின்னிக் கொண்டு
காலம் முழுமைக்கும்
காதலி நான் உண்டு என்று
கண்டுகொள்ள வைக்கும் சிநேகம்.

கூடல் வயது குன்றிய பின்னரும்
காதல் என்பது கரையாத ஒன்று என
அன்பு காட்டும் அண்மை.

கோபப்பட்டு நான் கடின வார்த்தை பேசியபோதிலும்
அமைதி காட்டிப் பின் பெரிதுபடுத்தாத பெண்மை.

ஆவேசம் நான் கொள்கையில் அடக்கி வைக்கும் உன்
ஆதிக்கம் கலந்த அன்பு.

எங்கேனும் நான் எல்லை மீறினால்
கண் ஜாடையிலேயே என்னைக் கட்டுப்படுத்தும் தீரம்.

உறவின் உச்சத்தில் என் மார்பு உணரும்
உன்னிரு கண் ஈரம்.

இத்தனை கேட்டாலும்
என் இதழ் அசைவது ஒரு கேள்விக்குத்தான்.

கிடைப்பாயா?

விடியல் தேடுகிறேன்.. Tuesday, Dec 23 2008 

 

விடியல் தேடும் பறவைகாள்..

விடியல் என்றால் என்னவென்று விளம்ப இயலுமா?

இருளகன்று பிறப்பதுதான் விடியலென்றால்
இருள் கவியும் பொழுதினில் அது இறந்ததோ?

இல்லை, விடியலென்றொன்று இருந்ததோ?

தேடும் கணப்பொழுதுகளில் கண்ணுறங்கினால்
விடியலென்ன வீடு தேடியா வரும்?

ஒளி தேடுங்கள் உங்களுக்குள்ளே..
இருளும், விடியலும் உங்கள் இரு கண்களுக்குள்ளே..

காதலுடன்

ராஜா

கடற்கரைக் காட்சி Friday, Oct 10 2008 

மனிதர் முகம் காண மறுத்து தன்
முதுகு காட்டிக் கடலை
முத்தமிட முயற்சிக்கும் மனிதர்கள்..

நிஜத்தில்தான் நிறுத்த முடியவில்லை;
நிழற்படத்திலாவது..
புகைப்படக் கலைஞர்கள்
புன்னகைக்கும் அலைகள் முன்.

அன்றைய வேளை உணவறியாது
வயிற்றுப் பிழைப்பை வாயால் வாழும் சிறு தொழிலாளிகள்..

நேரம் போனது தெரியாமல் கடலை
நேசப் பார்வை பார்த்தவர்கள்
நேரம் உணரும்போது
நிதரிசனம் உறைக்கும்பொழுது

தவிப்புடன் எழுந்து தூசி தட்டுகிறார்கள்;
கவலை ஒட்டிக் கொள்கிறது.

.

எப்படிச் சொல்வது? Thursday, Mar 6 2008 

      

எப்படிச் சொல்வது?

பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?

காதலுடன் பேசக்
காட்டாற்று வெள்ளமாய்க்
கரைபுரண்டு வந்த கவிதைகள் உன்
கண்களைக் கண்டதும் கானலாகின.

சொல்ல நினைத்துத் துடித்தவை
சொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.

ஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.

கண்டவுடன்
கதவுக்குப் பின் மறையும் உன்னைக்
காண மனது துடித்தாலும்
பண்பாடு தடுக்கிறது;
என் பாடு சொல்ல வழியில்லையே?

சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொலவது?

நீ தான்.. Thursday, Mar 6 2008 

      

கவிதாஞ்சலி:

என்
உள்ளத்தில் நீ தான்; உருவத்தில் நீ தான்!
கண்களில் நீ தான்; கண்ணீரிலும் நீ தான்!

கடமையிலும் நீ தான்; கவிதையிலும் நீ தான்!
எண்ணத்தில் நீ தான்; எழுத்திலும் நீ தான்!

பேச்சிலும் நீ தான்; மூச்சிலும் நீ தான்!
தூக்கத்தில் நீ தான்; ஏக்கத்திலும் நீ தான்!

மோகத்தில் நீ தான்; சோகத்திலும் நீ தான்!
சொல்லில் நீ தான்; சொப்பனத்திலும் நீ தான்!

சந்தோஷத்தில் நீ தான்; சங்கடத்தில் நீ தான்!
முத்தத்தில் நீ தான்; என் மொத்தத்திலும் நீ தான்! – ஆக,

என்னில் நிரம்பி வழிவது
நீதான்! நீ மட்டும் தான்..!

 

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.