ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.. Friday, Feb 13 2009 

write2

ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்..

உயிர் செதுக்கி உணர்வு பதுக்கி
ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.

சில கேள்விகள் எனக்கு..

கவிதையின் நோக்கம் என்ன?
அது யாருக்குச் சொந்தம்?

யாருக்காக எழுதப்பட்டதோ அவளுக்கா?
உயிர் கொடுத்துப் படைத்தானே அவனுக்கா?

கவிதைகளின் கடைசிக் குறி எங்கே?
வினாக்குறியுடன் முற்றுப் பெறவா
என் கவிதை எழுதப்பட்டது?

விழலுக்கிறைத்த நீரா என் உணர்வுகள்?

எது எப்படியாயினும்
என் கவிதைக்கு முகவரி எது?

என் கவிதைகள் உறங்க
காட்டுங்களேன் ஒரு கருவறை..

கடைசிக்கு ஒரு கல்லறையேனும்..

காணாமலே போனோம்.. Wednesday, Feb 11 2009 

memories1

எழுதிவைத்த வார்த்தைகளெல்லாம் ஏட்டோடு போக..

பதிந்து வைத்த நினைவுகளெல்லாம் பாதியில் போக..

கவிதைகள் சொல்லிக் களித்த பொழுதுகள் காணாமல் போக..

காத்திருந்த கணப் பொழுதுகள் காத்தோடு போக..

இல்லாமல் இல்லை எனக் கருதியதெல்லாம் இல்லாமல் போக..

எஞ்சி நின்ற நானும் என் நினைவுகளும்

கண் பார்ப்பதைத் தவிர்த்துக் கரைந்து போனோம்..

கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Thursday, Jan 15 2009 

கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா?

Eyes

நான்கு நபர்களிடம் நான் கண்களில் வலி கண்டிருக்கிறேன்.

ஒன்று: உடல் ஊனமுற்றவர்களை நாம் வித்தியாசமாகப் பார்க்கும்போது நம் பார்வை போகிற இடம் அறிந்து வேதனையுடன் பார்ப்பார்கள். அதில் அவமானமும் வலியும் சேர்ந்திருக்கும்.

இரண்டு: முதியோர் இல்லங்களில் வாழும் இதயங்கள். நாம் உள்ளே வருகையில் நம் முகங்களில் அவர்களுடைய பிள்ளைகளைத் தேடும் அவர்களது கண்களில் தெரியும் வலி…. ஆண்டவா..

மூன்று: தனது வீட்டுப் பொருட்களை விற்க ஆரம்பித்த பின் அவ்வீட்டுப் பெண்களின் கண்களில் தெரியும் வெறுமையும் வலியும் (எனக்கு எடுத்துக்காட்டியது: எழுத்தாளர் திரு. எஸ்ரா)

நான்கு: சொந்த ஊர் விட்டேகும் ஒவ்வொருவரின் கண்களிலும் ஒரு வலி இருக்கும். அந்த வலியில் ஒரு ஏக்கம் இருக்கும். பிழைப்பிற்காக என்று சமாதானம் செய்து கொண்டாலும், அந்த வலி கொடுமையானது.

முதல் அனுபவம்:
நான் சென்னைக்கு வந்த புதிதில், பட்டிக்காட்டான் மிட்டாயைப் பார்ப்பது போல் சென்னையின் ஒவ்வொரு இடங்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது தேனாம்பேட்டை சந்தையில் நடந்து போகையில், ஒரு குடிசையின் முன், திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான குள்ள மனிதர் ஒருவர், அவர் பெயர் நினைவில்லை, கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணியின் காரைக் கிண்டலடித்தபடி வருவாரே, அவர் அமர்ந்திருந்தார். அவரைக் கண்கள் விரியப் பார்த்து விட்டு, இவர்தானே சினிமாவில் நடிச்சது? என்று என் அருகில் வந்தவரைக் கேட்டபடி திரும்பத் திரும்பப் பார்த்தபடி சென்றேன். அவர் அபோது லேசாகத் தலை சாய்த்து என் பார்வையைச் சந்தித்தபடி இருந்தார். அவரது கண்களில் அப்போது தெரிந்த வலி, இன்னும் கூட என்னைப் பெரும் அவஸ்தைக்குள்ளாக்குகிறது.

அவரை சமீபத்தில் இப்படிக்கு ரோஸ் படப்பிடிப்பு தளத்தில் பார்த்தேன். தன் வலிகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். அன்று நான் பார்த்த பார்வை பற்றியும் சொல்வாரோ? என்று ஒரு குற்ற உணர்ச்சியுடனே அவரை படப்பிடிப்பு முடியும் வரை மறைவாக நின்று பார்த்தபடி இருந்தேன். கடைசி வரை அவர் அதை சொல்லவேயில்லை; அதுதான் என்னை இன்னும் வேதனைப் படுத்தியது.

இரண்டாவது அனுபவம்:
என் நண்பர் வேளச்சேரியில் நடத்திவரும் முதியோர் இல்லத்துக்கு நண்பர்களின் பிறந்த நாட்களில் சென்று வேண்டுவன கொடுத்துப் பேசிவிட்டு வருவது வழக்கம்.

அப்படிச் செல்லும்போதெல்லாம், பலர் முகங்கள் மலரும்; ஆனால் ஒரு சிலர், அருகில் வந்து அவர்கள் கைகளை கண்களுக்கு மேல் கவசம் போல் வைத்து நம் முகங்களை உற்றுப் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் நகர்ந்து விடுவார்கள். அந்த அனுபவத்தை இங்கு யாரேனும் சந்தித்திருப்பீர்களேயானால் மனதைத் தொட்டு சொல்லுங்கள், அன்று நிம்மதியாக சாப்பிட்டீர்களா? இளைஞர்கள் அன்று உங்கள் பெற்றோரிடம் குறைந்த பட்சம் அலைபேசியிலாவது அன்பாகப் பேசாமல் உறங்கச் சென்றிருப்பீர்களா?

இன்னொன்று தெரியுமா? அவர்களில் சிலர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பேச்சு இலக்கற்றதாக இருக்கும். என்னுடன் புதிதாக வந்த மொழி புரியாத தோழி, ஆச்சரியமாகக் கேட்டாள்: “இவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்?” நான் என்ன சொல்வதெனத் தெரியாமல் விழித்துவிட்டுச் சொன்னேன்: “இறைவனுக்கும் இவர்களுக்கும் எத்தனையோ இருக்கும், வா!”

மூன்றாவது அனுபவம்:
எஸ்ராவின் துணையெழுத்து புத்தகத்தில் எண்ணும் எழுத்தும் என்ற கட்டுரையில் வீட்டுப் பொருட்களை விற்க ஆரம்பித்து விட்ட பின்னர் பெண்களின் முகங்கள் மாறிவிடுவது பற்றிச் சொல்லியிருப்பார்: “வெளிப்படுத்தப்படாத துயரம் கத்தியின் கூர்மைபோல் பளிச்சிடும்” என்பதாக. படித்த போது புரியவில்லை.

சென்னையில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கென்று எனக்கொரு கடை இருக்கிறது. அங்கு ஒரு வாடிக்கையாளர் பழைய காலத்து ஊஞ்சல் வேண்டும் என்று கேட்டார். தாம்பரத்தில் ஏதோ ஒரு வீட்டில் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அங்கே நானும் என் சகோதரியின் கணவருமாகச் சென்றோம்.

நாங்கள் சந்தித்த அந்த வீட்டுப் பெண்மணிக்கு 50 வயதிருக்கலாம். அவரின் குரலிலும் விழியிலும் தெரிந்த விரக்தி கூர்மையாக இருந்தது.

வெறுப்பாகப் பேசிய பெண்மணியிடம் கேட்டேன்: “அம்மா, தவறா எடுத்துக்காதீங்க, நாங்க வாங்க வந்திருக்கோம்; நீங்க இப்படி வெறுப்பா பேசினா எப்படிங்க வாங்கறது?”
அந்த அம்மா உடனே, “பின்ன என்னங்க? எங்க அம்மாவுக்கு அவங்க அம்மா வீட்ல கொடுத்த சீருங்க இது, என் வீட்ல இருந்து எனக்கு சீராக் குடுத்தது, ஆளாளுக்கு ஒரு விலை சொல்றாங்க, இது பெருமை எனக்குத்தாங்க தெரியும்!” என்று சொல்லி அழவே ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த பொருளுக்கு ஒரு விலை சொல்லிக் கொடுத்து விடலாம்;  அவருடைய உணர்வுகளுக்கு என்ன விலை கொடுத்துவிட முடியும்? வேண்டாமென்று சொல்லி விட்டு வந்து விட்டோம்..

நான்காவது அனுபவம்:
பலரைப் பற்றியது, என்னையும் சேர்த்து.

ச்மீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம். என் சகோதரியின் கணவருடைய தாயாரும், தகப்பனாரும் அடுத்தடுத்து இறைவனடி சேர்ந்தார்கள். சொந்த ஊரான பழனியில் நிகழ்ந்த மரணங்களுக்கு, என் சகோதரியின் கணவரால் இறுதி நேரத்தில்தான் போய்ச் சேரமுடிந்தது. அவருடைய தாயாரின் மறைவுக்காவது, உடல் நிலை சரியில்லாமல் மரணப்படுக்கையில் இருந்தார்கள்; கிளம்புவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்தபடி இருந்தோம். ஓரிரவு உடலைப் பாதுகாத்து வைத்திருந்தார்கள். ஆனால், மனைவின் மறைவு இரண்டாமவரை மிகுந்த துயரத்துக்கு ஆளாக்கி, உள்ளுக்குள்ளேயே கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போய் அதிரடியாக ஒருநாள் அதிகாலை மாரடைப்பில் காலமானார்.

அந்தச் செய்தியை யாருமே எதிர்பார்க்கவில்லை. அவசர அவசரமாகக் கிளம்பி பகல் முழுக்கப் பயணம் செய்து, ஊருக்குச் சென்றும், அவரைக் குளிப்பாட்டி இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லத் தயாராக இருந்த போதுதான் போய்ச் சேர்ந்தோம். அவரது முகத்தை நாங்கள் பார்த்தது வெறும் 5 நிமிடங்கள் தான். அப்போதுதான் எதற்கும் உணர்வுகளை வெளிக்காட்டாத என் சகோதரியின் கணவர் அழுததைப் பார்த்தேன்.

அதிலிருந்து அவர் இன்றும் “ஊருக்கே போயிடலாம் ராஜா” என்று விரக்தியோடு சொல்லிக் கொண்டே இருக்கிறார். அவருக்காவது இறுதியாகத் தந்தையின் முகத்தைப் பார்க்க முடிந்தது. வெளி நாடுகளில் வாழ்ந்து எந்த நல்லது, கெட்டதுக்கும் ஊருக்கு வர இயலாமல் இருப்பவர்கள் எத்தனை பேர்?

சொந்த மண்ணை விட்டுப் பிரிந்து, எப்போதாவது ஊர்ப் பேரையோ, தன் மொழியையோ  கேட்டவுடன், சிலிர்த்துத் திரும்பிப் பார்க்கும் மக்களின் கண்கள் வலி மிகுந்தவையே.

அன்புள்ள காதலியே, என் இதயம் எழுதுவது.. Tuesday, Dec 23 2008 

என்
பறவை நினைவுகளில் உன்
பங்களிப்புதனைப் படம் பிடித்துப் பார்க்கையில்
இதயத்தின் ஈரமான ஓர் ஓரத்தில்
வலிக்கிறது…. இன்னும்.

அதற்கு நீ காதல் என்று பெயரிட்டதாய் நினைவு.

காதல் என நாம் கருதிய நினைவுகளில்
மெல்ல நான் மூழ்குகையில்
என் சிந்தனைகளே என்னைச்
சிரத்தையோடு சிதைக்கின்றன.

இப்போது என் இதயம் கேட்பது சொல்லட்டுமா?

ஒரு தாய்ப்பறவை தன்
குஞ்சுகளுக்களிக்கும் கதகதப்பு.

மழலை பசியுணர்ந்து
மார்பு கொடுக்கும் தாய்மை.

குலுங்கி நான் அழும்போது
குனிந்து என் முதுகு தடவி
ஆறுதல் சொல்லும் தோழமை.

தோல்வி கண்டு நான் துவளுகையில்
இறைவன் துணை சொல்லி
இதயம் தேற்றும் இதம்.

ஒவ்வொரு ஸ்பரிசத்திலும்
உனக்கு நான் இருக்கிறேன் என உணர்த்தும் உறுதி.

கைவிரல் பின்னிக் கொண்டு
காலம் முழுமைக்கும்
காதலி நான் உண்டு என்று
கண்டுகொள்ள வைக்கும் சிநேகம்.

கூடல் வயது குன்றிய பின்னரும்
காதல் என்பது கரையாத ஒன்று என
அன்பு காட்டும் அண்மை.

கோபப்பட்டு நான் கடின வார்த்தை பேசியபோதிலும்
அமைதி காட்டிப் பின் பெரிதுபடுத்தாத பெண்மை.

ஆவேசம் நான் கொள்கையில் அடக்கி வைக்கும் உன்
ஆதிக்கம் கலந்த அன்பு.

எங்கேனும் நான் எல்லை மீறினால்
கண் ஜாடையிலேயே என்னைக் கட்டுப்படுத்தும் தீரம்.

உறவின் உச்சத்தில் என் மார்பு உணரும்
உன்னிரு கண் ஈரம்.

இத்தனை கேட்டாலும்
என் இதழ் அசைவது ஒரு கேள்விக்குத்தான்.

கிடைப்பாயா?

விடியல் தேடுகிறேன்.. Tuesday, Dec 23 2008 

 

விடியல் தேடும் பறவைகாள்..

விடியல் என்றால் என்னவென்று விளம்ப இயலுமா?

இருளகன்று பிறப்பதுதான் விடியலென்றால்
இருள் கவியும் பொழுதினில் அது இறந்ததோ?

இல்லை, விடியலென்றொன்று இருந்ததோ?

தேடும் கணப்பொழுதுகளில் கண்ணுறங்கினால்
விடியலென்ன வீடு தேடியா வரும்?

ஒளி தேடுங்கள் உங்களுக்குள்ளே..
இருளும், விடியலும் உங்கள் இரு கண்களுக்குள்ளே..

காதலுடன்

ராஜா

கடற்கரைக் காட்சி Friday, Oct 10 2008 

மனிதர் முகம் காண மறுத்து தன்
முதுகு காட்டிக் கடலை
முத்தமிட முயற்சிக்கும் மனிதர்கள்..

நிஜத்தில்தான் நிறுத்த முடியவில்லை;
நிழற்படத்திலாவது..
புகைப்படக் கலைஞர்கள்
புன்னகைக்கும் அலைகள் முன்.

அன்றைய வேளை உணவறியாது
வயிற்றுப் பிழைப்பை வாயால் வாழும் சிறு தொழிலாளிகள்..

நேரம் போனது தெரியாமல் கடலை
நேசப் பார்வை பார்த்தவர்கள்
நேரம் உணரும்போது
நிதரிசனம் உறைக்கும்பொழுது

தவிப்புடன் எழுந்து தூசி தட்டுகிறார்கள்;
கவலை ஒட்டிக் கொள்கிறது.

.

காதல் சுயசிற்பி.. Tuesday, Apr 29 2008 

சொல்லச் சொல்லத் தீராத என் கனவை,

நான் சொல்லத் தவிக்கிற என் மனசை,

செல்லச் செல்லப் பின் தொடரும் ஒரு நிழலை,

கல்லக் கல்லக் குறையாத வாழ்க்கையை,

இவையனைத்தையும் மௌனமாகச் சொல்லிக் கொடுத்து

மெல்ல மெல்லச் செதுக்கும் என்னை என் காதல்..

எப்படிச் சொல்வது? Thursday, Mar 6 2008 

      

எப்படிச் சொல்வது?

பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?

காதலுடன் பேசக்
காட்டாற்று வெள்ளமாய்க்
கரைபுரண்டு வந்த கவிதைகள் உன்
கண்களைக் கண்டதும் கானலாகின.

சொல்ல நினைத்துத் துடித்தவை
சொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.

ஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.

கண்டவுடன்
கதவுக்குப் பின் மறையும் உன்னைக்
காண மனது துடித்தாலும்
பண்பாடு தடுக்கிறது;
என் பாடு சொல்ல வழியில்லையே?

சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொலவது?

நீ தான்.. Thursday, Mar 6 2008 

      

கவிதாஞ்சலி:

என்
உள்ளத்தில் நீ தான்; உருவத்தில் நீ தான்!
கண்களில் நீ தான்; கண்ணீரிலும் நீ தான்!

கடமையிலும் நீ தான்; கவிதையிலும் நீ தான்!
எண்ணத்தில் நீ தான்; எழுத்திலும் நீ தான்!

பேச்சிலும் நீ தான்; மூச்சிலும் நீ தான்!
தூக்கத்தில் நீ தான்; ஏக்கத்திலும் நீ தான்!

மோகத்தில் நீ தான்; சோகத்திலும் நீ தான்!
சொல்லில் நீ தான்; சொப்பனத்திலும் நீ தான்!

சந்தோஷத்தில் நீ தான்; சங்கடத்தில் நீ தான்!
முத்தத்தில் நீ தான்; என் மொத்தத்திலும் நீ தான்! – ஆக,

என்னில் நிரம்பி வழிவது
நீதான்! நீ மட்டும் தான்..!

 

கவிதைக் குருதி.. Saturday, Sep 22 2007 

கவிதைக்குருதி.. 

உன் கண்விழிக் கருமையின் கீழே காத்திருக்கும்
சிறு கண்ணீர்த்துளி நான்.

விழுவதும், விழிகளில் மீள்வதும் உன் பொறுப்பு.

கவிதைகள் சொல்லிக் கண் பார்த்திருப்பதும்
கண்ணீர் விழுங்கி வான்நோக்கியிருப்பதும்
காதலில் இயல்புதானெனினும்
காத்திருப்பு பதைக்க வைக்கிறது.

உறைவதா? மறைவதா?
உணர்வுகளின் வெப்பத்தில் கரைந்தொழிவதா?
சொல்.

காலக் கழிவுகளில் எஞ்சி விட்ட நினைவலைகளைக்
கணம்தோறும் சீர்தூக்கிப் பார்க்கிறேன்.
இமைகள் துடிக்க, இதயம் வலிக்க
உனக்காக சொரிந்தது கவிதைக் குருதி..

காதலுடன்
ராஜா

அடுத்த பக்கம் »

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.